Home » » ஜயலத் ஜயவர்தனவின் இழப்பு தமிழ், முஸ்லிம் சமூகத்தின் துரதிருஷ்டமே!

ஜயலத் ஜயவர்தனவின் இழப்பு தமிழ், முஸ்லிம் சமூகத்தின் துரதிருஷ்டமே!

Written By EGK NEWS on Sunday, June 2, 2013 | 7:06 PM

சிங்களப் பேரினவாதம் கோலோச்சுகின்ற இக்கால கட்டத்தில் சிறுபான்மை சமூகங்களுக்காக துணிச்சலுடன் குரல் கொடுத்து வந்த முற்போக்குவாத சிந்தனை கொண்ட சிங்களத் தலைவர்களுள் ஒருவரான டாக்டர் ஜயலத் ஜயவர்தனவின் திடீர் மறைவு எம் சமூகங்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் களமுனைத் தொகுதி பிரசாரச் செயலாளர் செயிட் அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;

"யுத்த காலத்திலும் அதற்குப் பிற்பட்ட காலத்திலும் தமிழ் பேசும் மக்களுக்காக மிகத் துணிச்சலுடன் குரல் கொடுத்து வந்த பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவின் திடீர் மறைவு எமக்கு பேரதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்திலும் சர்வதேச மட்டத்திலும் குரல் எழுப்பி வருகின்ற சிங்களத் தலைவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கின்றனர். அவர்களுள் முன்னிலை வகித்து வந்த ஒரு தலைவரே டாக்டர் ஜயலத் ஜயவர்தன ஆவார்.

தமிழ் மக்களின் நியாமான உரிமைகளுக்காகவும் அபிலாஷைகளுக்காகவும் நீதி நேர்மையாக மனச்சாட்சியுடன் குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக அவர் சிங்கள சமூகத்தினர் மத்தியில் சிங்களப் புலி என முத்திரை குத்தப்பட்டு, விமர்சிக்கப்பட்டு வந்தார்.

எமது நாட்டில் பேரினவாத சிந்தனை மேலோங்கி சிறுபான்மையினரை நெருக்கடிக்குள் தள்ளி விட்டு அவர்களை நசுக்கும் திட்டங்கள் பௌத்த பேரினவாத அமைப்புகளாலும் அரசியல் தலைமைகளாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த இக்கட்டான சூழ்நிலையில் நமக்காக பேசக்கூடிய, நமக்கு பக்க பலமாக இருக்கக்கூடிய ஒரு சிங்களத் தலைமையை இலந்திருப்பதானது உண்மையிலேயே தமிழ், முஸ்லிம் சமூகத்தினரின் துரதிருஷ்டமே.

அது மாத்திரமல்லாமல் நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்காகவும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் அவர் ஆற்றி வந்த பாரிய பங்களிப்பை இந்த நாட்டு மக்கள் எளிதில் மறந்து விட முடியாது.

இந்நிலையில் அவரது மறைவுக்காக கல்முனைத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE