Home » , , » பராஅத் இரவு - ஓர் உண்மை விளக்கம் !‏

பராஅத் இரவு - ஓர் உண்மை விளக்கம் !‏

Written By EGK NEWS on Monday, June 17, 2013 | 5:40 PM

அல்லாஹ் தன் திருமறையில்...
தமது முகத்தை அல்லாஹ்வுக்கு பணியச் செய்து,நல்லறமும்  செய்பவருக்கு கூலி அவரது இறைவனிடம் உள்ளது.  அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்.  (அல்குர்ஆன் 2: 112)
 
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்..
எனக்கு பின்னால் உருவாக்கப்பட்டவை அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயீ 1560

மார்க்கம் என்ற பெயராலும் - நன்மைகள் என்ற பெயராலும் ஏதேதோ காரியங்களையும், வணக்கங்களையும் தம்மனம் போன போக்கில் தீர்மானித்துக் கொண்டு அவற்றை குறிப்பிட்ட சில தினத்தில் - இரவில் செய்வதை சிறந்த அமல்களாக எண்ணி நம் சமுதாய மக்கள் செய்து வருகின்றனர். அந்த செயல்கள்;யாவும் பாதுகாக்கப்பட்ட இறைவேதமாம் அல்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? அல்லது மாண்பு நிறைந்த மாநபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படுத்திக் காட்டப்பட்டுள்ளதா? என்பதையெல்லாம் ஆய்வு செய்யாமல் கடமைகளாக சில காரியங்களை செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட காரியங்களில் ஒன்றுதான் ஷஃபான் மாதம் பதினைந்தாம் நாள் கொண்டாடப்படும் ஷபே பராத் (பராஅத் இரவு) ஆகும்.

ஒரு தினத்தை சிறப்பான தினம் அல்லது சிறப்பான இரவு என்று நாம் கூறவேண்டுமானால் அதை கண்ணியமிக்க அல்லாஹ் நமக்கருளிய வேதத்தில் கூறியிருக்கவேண்டும். அல்லது அவனது திருத்தூதர் நபி(ஸல்) அவர்கள் இனங்காட்டியிருக்க வேண்டும்.
அல்லாஹ் தன் திருமறையில்...

இரவை நீங்கள் அமைதி பெறுவதற்காகவும், பகலை வெளிச்சமுடையதாகவும் அவனே அமைத்தான். செவிமடுக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.        (அல்குர்ஆன் 10: 67)

பகலையும், இரவையும் படைத்தவன் அல்லாஹ் மட்டுமே ஆவான். அந்த படைப்பாளனுக்குத்தான் தெரியும் எந்த தினம் சிறந்தது, எந்த இரவு சிறந்தது என்று. அப்படிப்பட்ட தினங்களையும், இரவுகளையும் வல்ல நாயன் நமக்கு அறிவித்துக் கொடுத்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்! நபி(ஸல்) அவர்களும் செயல்படுத்திக் காட்டியுள்ளார்கள்.

•    ஜும்ஆ தினத்தை சிறந்த தினமாக அல்லாஹ் அறிவித்துக் கொடுத்துள்ளான்!

•    ஹஜ்ஜுடைய தினங்களை கண்ணியமானதென அல்லாஹ் கூறுகின்றான்!
•    இரு பெருநாட்களுடைய தினங்களை புனித நாட்களாக நபி(ஸல்) கூறுகின்றார்கள்!

•    ரமலான் மாதம் பற்றி அல்குர்ஆனில் விவரித்துக் கூறப்பட்டுள்ளது!

•    லைலத்துல் கத்ர் இரவை மகத்தான இரவாக அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் கூறுகின்றார்கள்.

•    குர்ஆன் அருளப்பட்ட மாதம் எது என்பது பற்றி அல்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது!   

•    ஷவ்வால் மாத ஆறு நோன்பு பற்றி மார்க்கம் சிலாகித்துச் சொல்கிறது.

•    ஆஷூரா தினம் பற்றி அறிவித்துக் கொடுக்கப்பட்டுள்ளது!

•    போர் செய்யக்கூடாத புனிதமாதங்கள் எவை என்பது வரையறுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றது!

•    தவிர, ஒவ்வொரு நாளின் கடைசி இரவில் முதல் வானத்திற்கு அல்லாஹ் வந்து நன்மாராயங்கள் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்!

மேற்கூறப்பட்டுள்ள தினங்களில் எந்தெந்த மாதிரியான அமல்களை இஸ்லாமியர்கள் செய்யவேண்டும்? அப்படி செய்வதால் எப்படிப்பட்ட நன்மைகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கும் என்பதை எல்லாம் இஸ்லாம் தெளிவாக எடுத்துச்சொல்லியுள்ளது.

இப்படி அடையாளங் காட்டப்பட்டவைகள் எல்லாம் அல்லாஹ்வின் சின்னங்களாக, மார்க்க அடையாளங்களாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அவைகளை கண்ணியப்படுத்துவது அல்லாஹ்வை கண்ணியப் படுத்துபவையாக அமையும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்படி அல்லாஹ்வினாலும், அவனது தூதர்(ஸல்) அவர்களாலும் சிறப்புக்குரியது என்று அடையாளங் காட்டப்பட்டுள்ள தினங்களிலும், இரவுகளிலும் இந்த பாரஅத் இரவு உள்ளதா? அப்படி ஏதேனும் அறிவித்துக் கொடுக்கப்பட்டுள்ளதா? அதற்கென்று விசேஷ அமல்கள் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்வோமேயானால், அல்லாஹ்வின் வேதத்திலும் இல்லை! அண்ணலார்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் இல்லை என்ற முடிவுக்குத்தான் வரமுடிகிறது.

இருப்பினும் பராஅத் இரவுக்கு ஆதாரங்கள் இதுவென்று சிலர் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களும் இஸ்லாம் கூறும் அளவுகோல்களின்படி சரியான ஆதாரங்களாக இல்லை.

முதல் ஆதாரம்!

தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம்.நாம் எச்சரிக்கை செய்வோராவோம்.அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.(அல்குர்ஆன் 44:2-4)       

திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட இரவைப் பற்றி இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.அதை பாக்கியமுள்ள இரவு என்றும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த பாக்கியமுள்ள இரவு,பராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம்.திருக்குர்ஆனை பொறுத்தமட்டில் ஒரு வசனத்தின் விளக்கத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும்.அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள பாக்கியமுள்ள இரவு எது?என்பதை தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன. 

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம்.  (அல்குர்ஆன் 97:1)

அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த இரவு ரமலான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகிறது.

இந்தக் குர்ஆன் ரமழான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது)மனிதர்களுக்கு நேர்வழி காட்டும்.நேர்வழியைத் தெளிவாகக் கூறும்.(பொய்யை விட்டு உண்மையை)பிரித்துக் காட்டும்.உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.        (அல்குர்ஆன் 2:185)                                   

இந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு என்பது ரமழான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

இரண்டாவது ஆதாரம்!

ஷஃபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள்.அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள்.அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகிறேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அலீ (ரலி) நூல் :இப்னுமாஜா 1378

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல.இதன் அறிவிப்பாளர் தொடரில் 'இப்னு அபீ ஸப்ரா' என்பவர் இடம் பெறுகிறார்.இவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மதும்,இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.

மூன்றாவது ஆதாரம்!

அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு படுக்கையில் நபி(ஸல்)அவர்களை காணாமல் வெளியே தேடி வந்தார்கள்.அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.ஷஃபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கிறான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:ஆயிஷா (ரலி) நூல் : திர்மிதி 670           இந்த ஹதீஸூம் ஆதாரப்பூர்வமானது அல்ல என்பதே உண்மை.

இதில் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் 'உர்வா' விடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யாபின் அபீகஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரி கூறிய கருத்தை பதிவு செய்து இது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம் அவர்களே தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

நான்காவது ஆதாரம்!

நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதை போன்று வேறு (எந்த மாதத்திலும்) நோற்பவராக இருக்கவில்லை.ஏனெனில் (வரும்)வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால்தான்.           அறிவிப்பவர்: அதாஹ் பின் யஸார் நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 9764,ஃபலாயிலுர் ரமலான் - இப்னு அபித்துன்யா

இத்தொடரில் வரும் அதாஹ் பின் யஸார் என்பவர் நபி (ஸல்)அவர்கள் காலத்தில் வாழாதவர்.நபி(ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும்.

ஐந்தாவது ஆதாரம்!

ரமலான் மாதம் நடுப்பகுதி 15 ஆம் இரவிலும் ஷஃபான் மாதம் நடுப்பகுதி 15 ஆம் இரவிலும் சூரத்துல் இஹ்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி யார் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்கமாட்டார்.  அறிவிப்பவர் : முஹம்மத் பின் அலீ நூல் : ஃபலாயிலுர் ரமலான் - இப்னு அபித்துன்யா 9  
 
இத்தொடரில் வரும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி ஸல் அவர்கள் காலத்தில் வாழாதவர்.நபி ஸல் அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும்.         

மேலும் அன்றைய தினம் மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஹஜ்ரத் அவர்கள் மூன்று யாஸீன் ஓதுவார்கள். முதல் யாஸீன் பாவமன்னிப்பிற்காகவும், இரண்டாம் யாஸீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், ஆயுள் நீடிப்பிற்காகவும், மூன்றாம் யாஸீன் பரக்கத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதுவார்கள்.

அந்நாளில் 100 ரக்அத்கள் கொண்ட விசேஷத் தொழுகையும் நடைபெறும். வேறு சில ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும் உண்டு.

இப்படியாக பராஅத் இரவு அன்று வணக்கம் என்ற பெயரில் மேற்கூறப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில் நம் சமுதாய மக்கள் சில அமல்களை செய்து வருவதை பார்க்கின்றோம்.  ஆனால், வல்ல அல்லாஹ் வணக்கங்களை இலகுவானதாகவும் வழமையாக செயல்படுத்தும் விதத்திலும் மனிதர்களுக்கு அருட்செய்துள்ளான். அவற்றின் நோக்கங்களையும், கூலிகளையும் உயர்ந்த தரத்தில் மனிதர்களுக்காக அமைத்துள்ளான்.

ஆனால் இந்த மனிதர்களோ வணக்கங்களை கடினமானதாகவும் என்றோ ஒருநாள் மட்டும் மாய்த்துக் கொள்ளும் விதமாகவும் கண்ணியமிக்க அல்லாஹ்வின் பெயராலேயே அரங்கேற்றுகின்றனர். இதுதான் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் முறையா?! என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்!

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...
ஷஃபானின் மத்திய நாள் வந்துவிட்டால் ரமலான் வரும் வரை நோன்பு வைக்காதீர்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹ்மத் 9330

பெருமானாரின் கட்டளை இவ்வாறிருக்க அதற்குமாறாக இவர்கள் ஷஃபானின் மத்திய நாளான பிறை 15ல் நோன்பு நோற்க வேண்டுமாறு வலியுறுத்துகின்றனர். இது இறைத்தூதரை பின்பற்றும் முறையாகுமா?!

வல்ல இறைவன் தன் திருமறையில்...                          
'இந்த தூதர் (முஹம்மத்) உங்களுக்கு சொல்பவராகத் திகழவும், நீங்கள் ஏனைய மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும் அவன் உங்களைத் தேர்ந்தெடுத்தான். உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்'.     (அல்குர்ஆன் 22:78)

மார்க்கத்தில் புதிதாக நுழைந்தவைகள் பற்றி நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

'''செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகளாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்'    அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயீ 1560

 பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல. எனவே இவர்கள் ஒரு புதுமையான காரியத்தை உருவாக்கியுள்ளார்கள்.எனவே அல்லாஹ்வுக்கு பயந்து அவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும். வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவனது உண்மையான மார்க்கத்தின் வழி நடக்க நல்லருள் செய்வானாக!

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE