Home » , , » இன ஒற்றுமையைக் காப்பதில் முஸ்லிம்களின் பங்களிப்பு மகத்தானது - சட்டமா அதிபர் பாலித்த பெர்னாண்டோ தெரிவிப்பு!

இன ஒற்றுமையைக் காப்பதில் முஸ்லிம்களின் பங்களிப்பு மகத்தானது - சட்டமா அதிபர் பாலித்த பெர்னாண்டோ தெரிவிப்பு!

Written By EGK NEWS on Monday, June 17, 2013 | 5:23 PM

இன ஒற்றுமையைக் காப்பதில் முஸ்லிம் மக்களின் பங்களிப்பு மகத்தானது. பாராட்டத்தக்கது. நாம் எப்போதும் ‘இலங்கையர்கள்’ என்றே சிந்தித்து செயற்பட வேண்டும். தேசிய நல் இணக்கம் இன்றேல் அழிவுதான் ஏற்படும்.

பிரிவினைகளை மறப்போம். சமூகம் என்ற ரீதியில் ஒன்றுபட்டு செயற்படுவோம். இது இன்றியமையாதது. சட்டமா இவ்வாறு அதிபர் பாலித்த பெர்னாண்டோ நேற்று  தெரிவித்தார்.

மதச்சுதந்திரம் உட்பட சகல சுதந்திரங்களும் அரசமைப்பில் தெளிவுபட வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.சகலரும் ஒன்றுபட்டு வாழ்வதன் மூலம் அழிவுகளைத் தடுக்கலாமென்றும் அவர் தெரிவித்தார்.

அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரணியின் 63ஆவது வருடாந்த மாநாடு நேற்றுக் காலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தேசியத் தலைவர் கே. என். டீன் தலைமையில் நடைபெற்றது.பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆளுமை விருதுகளையும் மற்றும் விருதுகளையும் வழங்கினார்.

பொதுச் செயலர் ரஸ்மரா ஆப்தீன் ஆண்டறிக்கை சமர்ப்பித்துப் பேசினார்.கெளரவ அதிதியாகக் கலந்துகொண்டு பேசிய சட்டமா அதிபர்;எனக்கு மும்மொழிகளிலும் பேசலாம். சிங்களம் நான் இன்று சரளமாகப் பேசுகின்றேன் என்றால், ரோயல் கல்லூரியில் எனக்குச் சிங்களம் கற்பித்த சமத் என்ற முஸ்லிம் ஆசிரியரே காரணம்.அவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் மாமனார் ஆவார்.நாம் மும்மொழிகளையும் பேச வேண்டும்.

மொழி தெரியாமை தான் சகல பிரச்சினைகளுக்கும் காரணமாகும்.ரோயல் கல்லூரியில் நாம் கற்ற போது ஆரோக்கியமான உறவுகள் வளர்ந்தன.தமிழ், முஸ்லிம், சிங்களம் என்றெல்லாம் நாம் பார்க்கவில்லை.முஸ்லிம் தலைவர்களான ரீ. பீ. ஜாயா, எம். சீ. எம். கலீல், கலாநிதி பதியுதீன் மஹ்மூத், சேர் ராசிக் பரீத், பாக்கீர் மாக்கார் போன்ற தேசியத் தலைவர்கள் சிறந்த மனிதர்கள்,

நல்ல அரசியல் வாதிகள், நல்ல முஸ்லிம் தலைவர்கள்.இவர்களின் உயர் பணிகளை நாம் மீட்டிப் பார்க்க வேண்டும். நாடு சுபிட்சம் காண வேண்டுமானால் சிறிய பிரச்சினைகளையும் நாம் மறக்க வேண்டும். என்றும் இலங்கையர்களாகக் சிந்தித்து செயற்பட வேண்டும்.வளரும் இளைய தலைமுறையினருக்கு நாம் சகோதரத்துவ உணர்வை, நல் இணக்கப்பாட்டை பயிற்றுவிக்க வேண்டும். இன்று தேசிய நல் இணக்கமே எமக்கு அவசியம் என்று சட்டமா அதிபர் தொடர்ந்து பேசினார்.

இஸட். ஏ. எம். ரிபாய், லத்தீப் பாரூக் ஆகியோருக்கு ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன.சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி, பாராளுமன்ற பேரவை உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் உட்பட பல பிரமுகர்கள் மாநாட்டில் பங்குபற்றினர்.வை. எம். எம். ஏ. பேரவையின் ‘சுப்பான்’ சிறப்பு மலரும் கெளரவ அதிதியால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE