Home » , » ராஜ்யசபா சீட்டைப் பெற தே.மு.தி.க.,வியூகம்! தி.மு.க.,வை ஓரங்கட்ட புது திட்டம்

ராஜ்யசபா சீட்டைப் பெற தே.மு.தி.க.,வியூகம்! தி.மு.க.,வை ஓரங்கட்ட புது திட்டம்

Written By EGK NEWS on Wednesday, June 5, 2013 | 6:50 PM

தமிழகத்தில் நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில், ஆறாவது சீட்டைப் பெற, விஜயகாந்தின், தே.மு.தி.க., கட்சி புது வியூகம் வகுத்து வருகிறது. தி.மு.க.,வை ஓரங்கட்டி விட்டு, மா.கம்யூ., ஆதரவுடன், வெற்றி பெற முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்த கட்சியுடன் ரகசிய பேச்சு வார்த்தையில், தே.மு.தி.க., தலைமை இறங்கி உள்ளது.

தமிழகத்தில், அடுத்த மாதம் காலியாக உள்ள, ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல், இம்மாதம், 27ம் தேதி நடக்கிறது. ஐந்து எம்.பி., பதவிகளை, அ.தி.மு.க., கூட்டணி கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. மீதியுள்ள ஒரு எம்.பி., பதவியை யார் கைப்பற்றுவது என்பதில், தி.மு.க., - தே.மு.தி.க., இடையே போட்டி நிலவுகிறது.கனிமொழிக்கு மீண்டும் எம்.பி., பதவியை அளிக்க, தி.மு.க.,வும்; விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷûக்கு அப்பதவியை அளிக்க, தே.மு.தி.க.,வும் காய் நகர்த்தி வருகின்றன. சட்டசபையில், தி.மு.க.,விற்கு, 23 எம்.எல்.ஏ.,க்கள் பலம் உள்ளது. ஆறு அ.தி.மு.க., ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை கழித்தால், தே.மு.தி.க.,விற்கும், 23 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். வெற்றி பெற, ஒரு வேட்பாளருக்கு, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை.ஐந்து ஓட்டுகளை வைத்துள்ள, காங்., ஆதரவை பெற்றுள்ள தி.மு.க.,வினர், மூன்று பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெற எடுத்த முயற்சிக்கு, அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இதனால், தே.மு.தி.க., ஆதரவு கிடைத்தால் மட்டுமே, தி.மு.க.,விற்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்கும்.

லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டுமானால், தற்போது, தி.மு.க.,வே முன் வந்து ராஜ்யசபா எம்.பி., பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என, தே.மு.தி.க., தலைமை விரும்புகிறது. இதற்காக, ரகசியமாக, அக்கட்சி
காய்களை நகர்த்தி வருகிறது. அதே நேரத்தில், தி.மு.க.,வை ஒதுக்கி விட்டு, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் எம்.பி., பதவியை
கைப்பற்றும் முயற்சியிலும், தே.மு.தி.க., இறங்கியுள்ளது. முதல் முயற்சியாக,
மா.கம்யூ., ஆதரவை பெற, தே.மு.தி.க., தலைமை ரகசிய பேச்சு வார்த்தையை
துவக்கி உள்ளது.மா.கம்யூ., கட்சிக்கு, 10 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
மா.கம்யூ.,வின் தமிழக நிர்வாகிகள் பலர், அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக உள்ளனர்.அதனால், டில்லியில் உள்ள அக்கட்சி நிர்வாகிகளிடம் பேசி, மாநில நிர்வாகிகளை சரி கட்டும் நடவடிக்கையை தே.மு.தி.க.,துவக்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில், இவ்விரு கட்சிகளுக்கும் இடையே இருந்த பழைய நட்பை பயன்படுத்தி, இம்முயற்சி நடக்கிறது.

தே.மு.தி.க., ஆதரவு மா.கம்யூ., நிர்வாகிகள் சிலர், இதற்காக, அக்கட்சிக்கு வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். தே.மு.தி.க.,வின் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்குமா என்பது ஓரிரு நாளில் தெரிய வரும். மேலும், தே.மு.தி.க.,வின் இந்த முயற்சி வெற்றி பெற்றால், ஐந்தாவது எம்.பி.,யை கைப்பற்றும் நிலையில் உள்ள அ.தி.மு.க., கூட்டணிக்கும் சிக்கல் ஏற்படும்.

இந்திய கம்யூ., திணறல்:
ராஜ்யசபா தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு, ஆதரவு கேட்டு, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குழு, முதல்வர் ஜெயலலிதாவை நாளை சந்திக்கும் என, தெரிகிறது. இதற்காக, முதல்வரிடம், இந்திய கம்யூனிஸ்ட் குழு, நேரம் கேட்டுள்ளது. ராஜ்யசபா எம்.பி., பதவிக் காலம் முடியும், இந்திய கம்யூ., தேசிய செயலர் ராஜாவை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என, இந்திய கம்யூ., கட்சி கோருகிறது. ராஜ்யசபா எம்.பி.,யைத் தேர்வு செய்யத் தேவையான, 34 எம்.எல்.ஏ.,க்களில், அக்கட்சியிடம், எட்டு எம்.எல்.ஏ.,க்களே உள்ளனர்.மேலும், 26 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின், 10 எம்.எல்.ஏ.,க்களும், அ.தி.மு.க.,வின், 16 எம்.எல்.ஏ.,க்களும் ஆதரவளித்தால் தான், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றி பெற முடியும்.

பிற கட்சிகளின் ஆதரவை கேட்பதற்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர், பரதன், துணை பொதுச் செயலர், சுதாகர் ரெட்டி, தமிழக செயலர், தா.பாண்டியன், தேசிய குழு உறுப்பினர், ஆர்.நல்லகண்ணு ஆகியோர் கொண்ட குழு, முதல்வர் ஜெயலலிதா மற்றும் மார்க்சிஸ்ட் தலைவர்களை வெள்ளிக்கிழமை சந்திக்க உள்ளது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவு முடிவு தெரிந்த பின், இந்திய கம்யூ.,வின் ராஜ்யசபா வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என, அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE