Home » , » இலங்கை போர் கப்பல்களை அகற்றக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்

இலங்கை போர் கப்பல்களை அகற்றக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்

Written By EGK NEWS on Friday, May 31, 2013 | 9:21 PM

தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் கச்சத்தீவு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இலங்கை போர் கப்பல்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

மீன்பிடி தடை காலமான 45 நாட்கள் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தற்போது கடலில் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தங்களுடைய வாழ்வாதாரத்தை தேடி வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு அச்சத்தையும், தங்கள் வருங்காலம் குறித்த கேள்வியையும் எழச் செய்துள்ளது இலங்கை அரசின் அடாவடி நடவடிக்கை.

ஏற்கனவே இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் படும் துயரங்களை அளவிட முடியாத நிலையில் தற்போது கச்சத்தீவு பகுதியில் 10–க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கச்சத்தீவு பகுதிக்கு அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பல்கூட தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்காக இல்லாத நிலையில் இலங்கையின் 10–க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய நாட்டையே ஆச்சரியங்கொள்ளச் செய்யும் செயலாகவே எண்ண வேண்டியுள்ளது.

மேலும், எல்லை தாண்டிச் செல்லும் மீனவர்களுக்கு இந்திய அரசாங்கமே அபராதம் வசூலிக்க உள்ளதாக வரும் செய்தி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் அச்சமின்றி கடலுக்குச் சென்று வர மத்திய, மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இந்நேரத்தில் எடுக்க வேண்டும்.

இந்திய தமிழ் மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் நிறுத்தப்பட்டுள்ள இலங்கை போர்க்கப்பல்களை அப்புறப்படுத்த வைப்பதோடு இந்திய கடற்படை பாதுகாப்பை இந்திய தமிழ் மீனவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE