Home » » இலங்கை பௌத்த நாடு அல்ல: சுமணரத்தின தேரருக்கு விளக்கமளிக்கிறார் மனோகணேஷன்

இலங்கை பௌத்த நாடு அல்ல: சுமணரத்தின தேரருக்கு விளக்கமளிக்கிறார் மனோகணேஷன்

Written By EGK NEWS on Saturday, June 1, 2013 | 8:38 AM

பொலனறுவையிலிருந்து மட்டக்களப்பு வரும் வழியெங்கும் புத்தர் சிலைகளை நிறுவுவேன் என்றும், மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரும் வழியை அடையாளப்படுத்துவதற்காக மட்டக்களப்பு நகர நுழைவாயில் அமைந்துள்ள பிள்ளையாரடி பகுதியில் புத்தர் சிலை ஒன்றை நிறுவி விளம்பர பலகை ஒன்றை அமைப்பேன் என்றும் கூறி மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரோ தேவையற்ற மத அடிப்படைவாத முரண்பாட்டை ஏற்படுத்துகிறார்.

 இந்த அடிப்படையில் மட்டக்களப்பில் அமைந்துள்ள இராமாயண புகழ் பெற்ற மாமாங்க பிள்ளையார் ஆலயத்தை அடையாளப்படுத்தும் முகமாக மாபெரும் பிள்ளையார் சிலைகளை இந்நாட்டு இந்துக்கள் மட்டக்களப்பு நகரை அடையும் அனைத்து சாலை நுழைவாயில்களிலும் அமைக்க முடியும் என்பதை மங்களராமய விகாராதிபதி நினைவில் கொள்ள வேண்டும். இது பெளத்த நாடு அல்ல. இது பெளத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் வாழும் நாடு என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
  
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
மட்டக்களப்பு மங்களராமய விகாரை ஒரு மத தலம். அது வியாபார நிலையமாக இருக்க முடியாது. மத வழிப்பாட்டு தலங்களுக்கு வருகை தருபவர்கள் தேடி வந்து வழிப்பட வேண்டும். இருக்கும் இடத்தையும், வரும் வழியையும் அடையாளப்படுத்த விளம்பரப்பலகை வைப்பது வியாபார நிலையங்களுக்கு ஆகும். இந்த உண்மை மட்டக்களப்பு விகாரதிபதிக்கு மறந்துபோய் விட்டது. இந்நிலையில் இவர் கண்டியில் இருக்கின்ற இந்து கோவில்களை பற்றி விளக்கம் இல்லாமல் பேசுகின்றார். இந்துக்கள் இல்லாத இடங்களில் இந்து கோவில்கள் ஒருபோதும் கட்டப்படுவது இல்லை. இன்று எங்காவது இந்து மக்கள் இல்லாத இடங்களில், இந்து கோவில்கள் இருந்தால் அங்கு ஒருகாலத்தில் இந்துக்கள் இருந்தார்கள் என்று அர்த்தமாகும்.
கதிர்காமம் மிக பிரசித்தமான கதிர்காம கந்தன் என்ற முருகன் ஆலயம் ஆகும். இன்று அங்கு இந்துக்களை விரட்டி அடித்துவிட்டு இந்து அடையாளங்கள் அழிக்கப்பட்டு, அந்த தலம் ஓரு பெளத்த தலமாக மாற்றப்பட்டு விட்டது. அங்கே இப்போது விஷயம் தெரியாமல் போய் வரும் இந்து யாத்ரீகர்கள், கதிர்காமத்தில் இன்று கதிர்காம கந்தனின் அருளாட்சியும் இல்லை, இந்துக்களும் இல்லை என சொல்லுகின்றார்கள். மத பக்தர்கள் தாம் வாழும் இடத்தில் கோவில் அல்லது விகாரை கட்டுவது என்பது ஒன்று. கட்டப்பட்டு இருக்கும் கோவில் அல்லது விகாரையை அடையாளப்படுத்துவதற்காக வழியெங்கும் சிலைகளை நிறுவுவது என்பது வேறு ஒன்று. அவற்றை விளம்பரப்படுத்துவதற்காக விளம்பரப்பலகை வைப்பது என்பது இன்னொன்று. மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரோ இந்த மூன்றையும் ஒன்றாக கருதி கருத்து தெரிவிப்பது, தேவையற்ற மத அடிப்படை வாத முரண்பாட்டை ஏற்படுத்துகின்றது.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE