Home » » கசினோக்களுடன் தொடர்புபடுத்தி முதலீடுகளைத் தடுக்க சிலர் முயற்சி - அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

கசினோக்களுடன் தொடர்புபடுத்தி முதலீடுகளைத் தடுக்க சிலர் முயற்சி - அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

Written By EGK NEWS on Wednesday, June 19, 2013 | 8:08 PM

கசினோக்களுடன் தொடர்புபடுத்தி வெளிநாட்டு முதலீடுகளைத் தடுக்க சிலர் முயற்சிக்கின்றனர். இவ்வாறானவர்கள் கிராம மட்டங்களில் இடம்பெறும் சூது விளையாட்டுக்களுக்கு எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லையென முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன கேள்வியெழுப்பினார்.

இலங்கையில் புதிதாக எந்தவொரு கசினோ விடுதிகளைத் திறப்பதற்கும் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.

வெளிநாடுகளிலிருந்து முதலீடு செய்யப்படும் பல் அபிவிருத்தித் திட்டங்களுக்கே அரசாங்கம் அனுமதி வழங்கியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன-

மூலோபாய அபிவிருத்தி சட்டத்தின் கீழ் பல் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்குகிறது. இதற்கமையவே அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரவுண் நிறுவனம் இலங்கையில் பல் அபிவிருத்தித் திட்டமொன்றுக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது.

400 அறைகளைக் கொண்ட நட்சத்திர ஹோட்டல்- உணவு விடுதி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியதாகவே இத்திட்டம் அமைந்துள்ளது.

250 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேலதிகமாக முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மூலோபாய அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வழங்கப்படும் வரிச் சலுகைகளே கிரவுண் நிறுவனத்துக்கும் வழங்கப்பட் டுள்ளது. இந்த கிரவுண் நிறுவனம் உள்ளூர் நிறுவனமொன்றுடன் இணைந்தே இத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது. குறித்த உள்ளூர் நிறுவனத்துக்கே இடம் வழங்கப்பட்டுள்ளது. எனினும்- கசினோ விடுதிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.

2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையை 25 இலட்சமாக அதிகரிப்பது என்ற இலக்கை நோக்கியே அரசு செயற்திட்டங்களை முன்னெடுக்கிறது. இவ்வாறு வரும் உல்லாசப் பயணிகள் பொழுதுபோக்குவதற்கு- தங்குவதற்கு- உணவருந்துவதற்கு சிறப்பான இடங்கள் அவசியம். இதற்கமையவே நாம் பல் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளோம்.

இலங்கையில் ஏற்கனவே கசினோ விடுதிகள் உள்ளன. இவை தற்பொழுது பாடசாலைகள்- மதஸ்தலங்களுக்கு முன்னாலேயே அமைந்துள்ளன. இதனைத் தவிர்க்கும் வகையிலேயே அரசாங்கம் டீ.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையை இதற்காக ஒதுக்குவதற்கு தீர்மானித்து வரவுசெலவுத்திட்டத்தில் இதனை அறிவித்தது.

இவ்வாறு இலங்கைக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளை- கசினோக் களுடன் தொடர்புபடுத்தித் தடுப்பதற்கு சில தரப்பினர் முயற்சிக்கின்றனர். கசினோக்கள் ஆரம்பிக்கப்பட்டால் சாதாரண மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு விடுவார்கள் என அவர்கள் கூறுகின்றனர்.

கிராம மட்டங்களில் இடம்பெறும் சூதாட்ட விளையாட்டுக்களாலேயே பாமர மக்களின் பொருளாதார நிலை பாதிக்கப்படுகிறது. இதனைத் தடுப்பதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் கசினோக்களுக்கு எதிராகவே குரல் கொடுப்பதாகவும் கூறினார்.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE