Home » » தமது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தும் தருணம் இந்தியாவிற்கு வந்துவிட்டது - மனோ கணேசன்!

தமது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தும் தருணம் இந்தியாவிற்கு வந்துவிட்டது - மனோ கணேசன்!

Written By EGK NEWS on Wednesday, June 19, 2013 | 8:01 PM

இந்திய மத்திய அரசின் கருத்துகள், இந்திய அரசு தலைவர்கள் வழங்கிய உறுதிப்பாடுகள் என மன்மோகன் சிங் சொன்னார், சோனியா சொன்னார் என கூட்டமைப்பு எம்பிக்கள் ஊடகங்கள் மூலமாக சொல்கின்றார்கள். கூட்டமைப்பு எம்பிக்களுடன் ஆளும் இந்திரா காங்கிரஸ் தலைவர், இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரது அழகான படங்களும் ஊடகங்கள் மூலமாக காட்டப்படுகின்றன. ஆனால், இந்திய அரசின் உண்மை நிலைப்பாடுகள் என்ன என்பது பற்றி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மயக்க நிலைமை நிலவுகின்றது. இது முடிவுக்கு வரவேண்டும். யுத்தத்தை நடத்தி முடித்த இந்தியா, தேசிய இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருமா, இல்லையா என தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றார்கள்.
  
13ம் திருத்தம் தொடர்பில் இந்திய அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டை நேரடியாகவும், பகிரங்கமாகவும், அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்க வேண்டிய வேளை வந்து விட்டது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
இந்தியாவின் நிலைப்பாடு இலங்கை, இந்திய அரசாங்களுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும், உரிய அழுத்தங்களை இந்திய மத்திய அரசு இலங்கை அரசின்மீது செலுத்துவதாகவே, இலங்கையில் வாழும் அப்பாவி தமிழ் மக்கள் நினைத்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் பெற்று எடுத்த குழந்தைதான், 13ம் திருத்தம் ஆகும். 13ம் திருத்தம் பெற்று எடுத்த குழந்தைதான் மாகாணசபைகள் ஆகும். இன்று இந்நாட்டில் மிகப்பிரபலமான வட மாகாணசபை தேர்தலை நாடு சந்திக்க போகும் வேளையில், இலங்கை அரசு 13ம் திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை கழற்றி எடுக்க எத்தனிக்கின்றது. இதற்கு முன்னால் வட-கிழக்கு இணைப்பை அறுத்து எறிந்தது. இப்போது இனவாதத்தை தூண்டி விட்டு அதிகாரங்களை அகற்ற எத்தனிகின்றது.
நாங்கள் அரசியல் அறிந்தவர்கள். இரண்டு நாட்டு அரசாங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள், இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையில் நடைபெறுவதை போல் நடைபெற முடியாது என எமக்கும் தெரியும். அமைதியான முறையில் பகிரங்கப்படுத்தாமல் இலங்கை அரசுடன் பேசி வருங்கின்றோம் என இந்தியா வழமையாக சொல்லி வந்துள்ளது. ஆனால், இன்று நிலைமை எல்லை மீறி வருகின்றது. இன்னமும் எதுவரையில் இந்தியா காத்திருக்க போகின்றது என்பதை நாம் அறிந்து கொள்ள விரும்புகின்றோம். 13ம் திருத்தம் தொடர்பில் இந்திய அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டை நேரடியாகவும், பகிரங்கமாகவும், அதிகாரப் பூர்வமாகவும் அறிவிக்க வேண்டிய வேளை வந்து விட்டது என்று நாங்கள் நம்புகின்றோம்.
கூட்டமைப்பின் டெல்லி விஜயங்கள், கூட்டமைப்பு தலைவர்கள் எனது நண்பர்கள். கூட்டமைப்பு பயணிக்கின்ற சிரமமான பாதை எமக்கு நன்கு தெரியும். ஆனால், தொடர்ச்சியாக புது டெல்லி சென்று இந்திய அரசு தலைவர்கள் சொன்னதாக செய்திகளை இலங்கை வந்து தமிழ் மக்களிடம் சொல்வது, கூட்டமைப்பின் ஏற்புடைமைக்கு இழுக்கை ஏற்படுத்தி விடும் என நான் எச்சரிக்க விரும்புகின்றேன். நல்ல எண்ணத்தில் இதை நான் சொல்கின்றேன்.
சொல்லொணா துன்பங்களை கண்டுவிட்ட தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சலிப்பை இந்த டெல்லி விஜயங்கள் ஏற்படுத்தியுள்ளன என்பதை கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவுடனும், சர்வதேசத்துடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தும் அதேவேளையில், தென்னிலங்கையில் இருக்கின்ற முற்போக்கு, ஜனநாயக சக்திகளுடன் இன்னமும் அதிகமாக கூட்டமைப்பு இணைந்து செயல்பட வேண்டும் என நான் விரும்புகின்றேன். இந்த சக்திகள் இன்று தென்னிலங்கையில் பலம் வாய்ந்தனவாக இல்லாவிட்டலும் கூட, நாளை நிலைமை மாறலாம். இந்திய, அமெரிக்க அரசுகளுடனான பேச்சுவார்த்தைகளும், தென்னிலங்கை கட்சிகளுடனான தொடர்பாடல்களும் சமாந்திரமாக நடைபெற வேண்டும்.
கூட்டமைப்பின் அனைத்து எம்பிக்களும் பங்கு பற்ற வேண்டும். கூட்டமைப்புக்கு அழைப்புதூர இருக்கும் உறவுக்காரனை விட, பக்கத்தில் இருக்கும் நண்பர்கள் பயனுள்ளவர்கள் என இலங்கை ஜனாதிபதி சென்றவாரம் கிளிநொச்சிக்கு சென்று சொன்னார். அவர் சொன்ன அர்த்தம் வேறு. ஆனால், நாம் வழமைமையாக சொல்லும், நமக்கு ஏற்கனவே தெரிந்த அந்த உதாரணத்தை நான் வேறு அர்த்தத்தில் கூட்டமைப்புக்கு ஞாபகப்படுத்துகின்றேன். தெற்கு கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கு ஒரு தனியான குழுவை கூட்டமைப்பு நியமிக்க வேண்டும். அதன்மூலம் சிங்கள் மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் தொடர்பான புரிந்துணர்வுகள் அதிகமாக ஏற்படும். இதை இன்று ஜனநாயக மக்கள் முன்னணி மிகுந்த சாணக்கியத்துடன் திறம்பட செய்து வருகின்றது.
இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினை இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினை அல்ல. வடக்கு-கிழக்கு பாரம்பரிய பிரதேசம் என்பது உண்மை. ஆனால், இன்று இந்த நாட்டுக்கு உள்ளே 31 இலட்சம் தமிழ் மக்கள், சரிசமாக வட-கிழக்கிலும், தென்னிலங்கை மாகாணங்களிலும் பரந்து வாழ்கின்றார்கள் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்துகொள்ள வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. எனவே ஒட்டுமொத்த தமிழ் மக்கள் தொடர்பாக நாம் தேர்தல், அரசியலுக்கு அப்பால் ஒரு உயர் மட்ட குழுவில் இணைந்து கொள்கை வகுத்து செயல்பட வேண்டிய வேளை வந்துவிட்டது. இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியுடனும், தென்னிலங்கை ஜனநாயக கட்சிகளுடனும் இன்னும் அதிகமாக கரங்கோர்த்து கொள்ளும்படி நான் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
13ம் திருத்தத்தை பாதுகாக்கும் இயக்கம், 13ம் திருத்தத்தை அழித்து ஒழிப்பதற்கு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி உட்பட பல இனவாத அமைப்புகள் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் வேளையில், நாம் 13ம் திருத்தத்தை பாதுகாக்கும் இயக்கம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் கலந்துரையாடல்களை நடத்தி கொண்டிருக்கின்றோம். எமது அடுத்த கலந்துரையாடல் நாளை கொழும்பில் நடைபெறுகின்றது. இந்த உரையாடலில் கலந்துகொள்ளும்படி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE