Wednesday, June 19, 2013

சிங்கள ராவயவின் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தவும் - ஜனாதிபதியிடம் அசாத் சாலி கோரிக்கை!

மாடுகளை அறுப்பதை நிறுத்தக் கோரி கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு ஊர்வலமாக வரும் சிங்கள ராவய அமைப்பினரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்-முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவரான அசாத் சாலி அவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கோரியுள்ளார். ஊர்வலமாக வந்த இவர்கள் கடந்த இரவு தங்காலை என்னும் இடத்தில் (ஜனாதிபதியின் பகுதியில்) ஒரு மாட்டிறைச்சிக் கடையை உடைத்து, தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டும் அசாத் சாலி அவர்கள், அந்தத் தாக்குதல் நடந்தபோது பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  
இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், எந்த விதமான நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதேவேளை, மாத்தறை, கந்தர என்னும் இடத்தில் முஸ்லிம் புகைப்படப் பிடிப்பாளர் ஒருவரை தாக்கிய இந்த ஊர்வலத்தில் வந்தவர்கள், அவரிடம் இருந்து புகைப்படக் கருவியை பறித்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. மாடுகள் அறுக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று கோரி ஒரு பௌத்த மதகுரு கண்டியில் தீக்குளித்ததை அடுத்து அங்கு இந்த அமைப்பினரின் போராட்டங்கள் சூடு பிடித்துள்ளன. இதற்கிடையே இந்த அமைப்பினர் ஊர்வலமாக வருகின்ற வீதிகளில் உள்ள சிறுபான்மையின முஸ்லிம்கள் தமது கடைகளை மூடியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தப் பகுதியில் உள்ள கடைகளுக்கு உரிய பாதுகாப்பை அரசாங்கம் வழங்கும் என்று அமைச்சர் ஏ.எச்.எம் . பௌசியிடம், உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment