இலங்கையின்
தலைநகரான கொழும்பில் ஒன்றோடொன்று தொடர்புற்ற மூன்று விடயங்கள் சமகாலத்தில்
நடைபெறுகின்றன. வெளித்தோற்றத்தில் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறுதுறை
சார்ந்தவைகளாகக் காணப்பட்டாலும் அரசாங்கத்தின் நகர்வில் இவை ஒன்றுடனொன்று
நெருக்கமான தொடர்புடைய சட்ட மாற்றங்கள். இன்னும் குறிப்பாகச்
சுட்டுவதானால், செப்டெம்பரில் நடைபெறப்போவதாகக் கூறப்படும் வடமாகாண சபைத்
தேர்தலை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்.
1. வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம்
அங்கீகாரம் வழங்கியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதனை அமைச்சரவையில்
முன்வைத்து விளக்கிய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்துகள்
ஊடகங்களில் வெளிவந்தன. வடக்கில் ஏற்கனவே குடியிருந்து, போர்க்காலத்தில்
இடம்பெயர்ந்த மக்களுக்கு அங்கு நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்கும்
உரிமையை இந்தச் சட்டத்திருத்தம் வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் தற்போது வேகமாக குடியேற்றப்படும் சிங்கள மற்றும் முஸ்லிம்
மக்களுக்கு, ஏற்கனவே குடியிருந்தவர்கள் என்ற பெயரில் சட்டபூர்வ
வாக்குரிமையை வழங்கும் திட்டமிட்ட சதிக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கும்
ஏற்பாடு இது. எவ்வாறாவது வடமாகாண சபைத் தேர்தலில் தமிழர் அல்லாத புதிய
குடியேற்றக்காரரை வெற்றிபெறச் செய்வதே இதன் இலக்கு.
2. பத்திரிகைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் என்ற பெயரில் பாரிய
திட்டங்களைக் கொண்டுவரும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இந்த வாரம்
சமர்ப்பிக்கப்பட்டது. ஊடகங்களை நெறிப்படுத்தல் என்ற பெயரால் அரசாங்கம் இதனை
அறிவித்தாலும், ஊடக சுதந்திரத்துக்கான சாவுமணி என்றே இதனைச் சொல்ல
வேண்டும்.
அரசாங்க ஊடகங்கள், அரசாங்க கட்டுப்பாட்டு ஊடகங்கள், அரசாங்க
அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் ஊடகங்கள், பயமுறுத்தல்களை மீறி
துணிச்சலாக சில உண்மைகளை வெளியிடும் ஊடகங்கள் என்று (நான்கு வகை) இலங்கை
ஊடகங்களை வகைப்படுத்தலாம். கொலை - ஆட்கடத்தல் - குண்டுத்தாக்குதல் -
பயமுறுத்தல் - தீவைப்பு போன்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஊசலாடிவரும்
அற்ப சொற்ப ஊடக சுதந்திரத்தையும் அடக்கி ஒடுக்கவென இச்சட்டத்திருத்தம்
கொண்டுவரப்படுகின்றது.
நாட்டின் ஒற்றுமை, தேசிய பாதுகாப்பு போன்றவற்றுக்குக் குந்தகம்
விளைவிப்பதாகக் கூறி, சில ஊடகங்களின் ஆயுளை முடிவுக்குக் கொண்டுவர
அரசாங்கம் விரும்புகின்றது.
முக்கியமாக, வடமாகாண சபைத் தேர்தல் (?) காலத்தின்போது இவ்வகையான கெடுபிடிகளை கையில் வைத்திருப்பது அரசிற்கு அவசியமாகின்றது.
இவ்விடத்தில் இரண்டு முக்கிய விடயங்களை நினைவில் கொண்டுவர வேண்டும்:
அ. 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதிப் பதவி ஏற்ற பின்னர் இதுவரை
22 ஊடகவியலாளர்கள் அங்கு கொலை செய்யப்பட்டுள்ளனர். இதைத் தவிர பலர்
தாக்கப்பட்டுள்ளனர். சிலர் காணாமல் போயுள்ளனர். இன்னொரு தொகையினர் தப்பிச்
சென்று வெளிநாடுகளில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.
ஆ. கடந்த மாதம் வெளிவந்த உலக ஊடக சுதந்திர அட்டவணையின்படி, ஊடக
சுதந்திரத்தை மதிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 162 இடத்திற்கு
இறங்கியுள்ளது. எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு இந்த அட்டவணையை வெளியிட்டது
குறிப்பிடத்தக்கது.
3. அடுத்தாக, முக்கியமானதும் முன்னுரிமை பெற்றதுமான 13வது அரசியல்
சட்டத் திருத்தத்தை நீக்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் கவனத்தைப்
பெறுகின்றது.
1987 ஜூலை மாத இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் 13வது திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இதிலுள்ள மூன்று அம்சங்கள் சிங்கள தேசத்தின் விருப்பத்துக்கு மாறாகப் பார்க்கப்படுகின்றன.
1987 நவம்பரில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபை, உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இரண்டாகிவிட்டது.
ஆனாலும், அருகருகாமையிலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட மாகாண சபைகள்
விரும்பினால் ஒன்றிணைந்து செயற்பட வாய்ப்பளிக்கும் அதிகாரம் 13வது
திருத்தத்தில் இருப்பதை சிங்கள பேரினவாதம் விரும்பவில்லை.
'வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு
வெற்றிபெற்றால்...."என்ற சிந்தனையில் பல அச்சமூட்டும் எதிர்விளைவுகளை
சிங்கள தேசம் கனவு காண்கிறது.
'என்றாவது ஒரு நாள் கிழக்கு மாகாண சபை கைமாறினால், அவ்வேளையில்
வடக்குடன் இணைந்து செயற்பட அது முன்வந்தால்....' என்ற அச்சமே அடிப்படையான
காரணம்.
அத்துடன் காணி மற்றும் காவற்றுறை அதிகாரங்களோடு மாகாண சபை தமிழர்
கைகளுக்குப் போனால், அதுவே தமிழீழம் என்ற தனிநாட்டுக்கு வழிவகுத்துவிடும்
எனவும் சிங்களம் பீதியடைந்துள்ளது.
கோதபாய ராஜபக்சவிலிருந்து தேச விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, பொதுபல
சேன, சிறிலங்கா பிக்குகள் முன்னணி போன்ற இனவாத சிங்கள பௌத்த
வெறியமைப்புகள் 13வது திருத்தத்தை நீக்கி 19வது திருத்தத்தை கொண்டுவரும்
முயற்சியில் கடந்த சிலவாரங்களாக இறங்கியுள்ளன.
இவற்றுக்கு ஆதரவு இல்லாதவர் போன்று வெளியில் காட்டிக்கொண்டாலும்,
"வடமாகாண சபைத் தேர்தலையும் 13வத அரசியல் திருத்தத்தையும் எதிர்க்கின்ற
அனைவருக்கும் மகிந்த ராஜபக்சவின் பூரண ஆசீர்வாதம் இருப்பது பகிரங்க
இரகசியம்" என்று கடந்த வார இதழின் இதே பக்கத்தில் சுட்டிக்காட்டியிருந்தது
இப்போது உலக அரங்குக்கு உண்மையாகிவிட்டது.
கடந்த புதன்கிழமை (ஜூன் 5ம் திகதி) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்
இவ்விரு விடயங்களுக்கும் ஆதரவாக மகிந்த ராஜபக்ச கருத்துத் தெரிவித்து
செயற்பட்டுள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தின் பிதாமகரான அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.
ஜெயவர்தனா வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பான என்ன சிந்தனையுடன்
செயற்பட்டார் என்பதை அறிவதற்கு அவரது பின்வரும் கூற்று முக்கியமானது.
1987 ஒப்பந்தத்திற்கு சில நாட்களுக்கு முன்னர், ஐ.தே.க.இன் தேசிய நிறைவேற்று கவுன்சில் கூட்டத்தில் அவர் கூறியது இதுதான்:
"...வடக்கு கிழக்கு இணைப்பு தற்காலிகமானது. இதனை நிரந்தரமாக்குவதானால்,
கிழக்கு மாகாண மக்களின் அபிப்பிராயத்தை அறிய வாக்கெடுப்பு நடத்தப்பட
வேண்டும். இதில் ஒற்றைப்பெரும்பான்மையின்றி எதனையும் செய்ய முடியாது.
அப்பாறை உட்பட்ட கிழக்கு மாகாணத்தில், முஸ்லீம்கள் 36 வீதமும்,
சிங்களவர் 27 வீதமும், தமிழர் 40 வீதமும் வாழ்கின்றனர். தமிழர்கள் இரு
பிரிவினர். மட்டக்களப்பு தமிழர் அரைப்பங்குக்கு மேலானவர்கள். மிகுதிப்பேர்
யாழ்ப்பாணத் தமிழர். இவர்கள் கிழக்கின் மொத்த சனத்தொகையில் 20வீதம்
மட்டுமே.
எனவே, 80 வீதமான மக்கள் இணைப்புக்கு எதிராகவே வாக்களித்தனர். எனது
அமைச்சரவையிலுள்ள தேவநாயகமும், மஜித்தும் இதனை எனக்குத்
தெரிவித்துள்ளனர்..." என்று தெரிவித்த ஜே.ஆர். ஜெயவர்தனா, ஒப்பந்தம்
கைச்சாத்தான பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், "மாகாணங்களின்
இணைப்பு தொடர்பான கருத்துக் கணிப்புத் தேர்தலில் இணைப்பை எதிர்த்தே நான்
பரப்புரை செய்வேன்" (At a press conference immediately after the Accord
was signed, President Jayawardene confirmed that polls in the Eastern
Province he would campaign against the merger) என்று சொல்லியிருந்தார்.
இவரது ஆட்சிக்காலத்தில் மட்டுமன்றி இவரைத் தொடர்ந்து வந்த பிரேமதாச,
சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்சவின் ஆட்சியிலும் அறிவிக்கப்பட்டதுபோல
இணைப்புக்கான எந்தக் கருத்துக்கணிப்பும் நடைபெறவில்லை.
ஆனால், ஜே.வி.பி. தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் அப்போதைய பிரதம
நீதியரசர் சரத் என். சில்வா சட்டப்பிழையை சுட்டிக்காட்டி, ஒன்றாகவிருந்த
வடக்கையும் கிழக்கையும் பிரித்ததுதான் நிகழ்ந்தேறியது.
இனியெப்போதுமே வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக்கூடாது என்ற கரிசனையில்,
காணி, காவற்றுறை அதிகாரங்கள் தமிழர்களுக்கு கிடைக்கக்கூடாது என்ற
காரணத்திற்காகவும், 13வது திருத்தத்தை படுகொலை செய்யும் வேலைகள்
நடைபெறுகின்றன.
முஸ்லிம் காங்கிரஸ் கேட்டிருக்கின்ற ஒருவார கால அவகாசமோ, வாசுதேவ
நாணயக்கார விரும்பும் தேசிய நல்லிணக்கமோ 13வது அரசியல் திருத்தத்தைக்
காப்பாற்றப்போவதில்லை. இந்தியாவின் வெறும் கையும் தமிழருக்கு முழம்
அளக்கமாட்டாது.
செப்டெம்பரில் வடமாகாண சபை தேர்தல் நடைபெற வேண்டுமானால், 13வது
திருத்தம் அதற்கு முன்னர் அழிக்கப்பட்டுவிடும். கோதபாயவின் விருப்பத்தை
மகிந்த விருப்புடன் நிறைவேற்றுவார்.
ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகள் ஒருபோதும் ஒற்றையாட்சி அமைப்பில் நிறைவேறாது என்பது மீண்டும் நிரூபிக்கப்படும்.
ஆனால், இந்துசமுத்திரப் பிராந்திய வல்லரசு என்றும், நான்காவது பெரிய
இராணுவத்தைக் கொண்ட நாடு என்றும் பெருமை பிதற்றும் இந்தியாவுக்கு இலங்கை
என்னும் குட்டித்தீவு முகத்தல் கரி அப்புவது என்பது இன்னொரு புதிய வரலாறாக
அமையப்போவது நிச்சயம்.
இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றவாவது, தமிழர்கள் மீண்டும் வீரர்களாக மாறவேண்டி வரலாம். யார் கண்டது?
0 comments:
Post a Comment