Home » , » ஆண் - பெண் உடலுறவு திருமணத்துக்குச் சமமே - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு!

ஆண் - பெண் உடலுறவு திருமணத்துக்குச் சமமே - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு!

Written By EGK NEWS on Wednesday, June 19, 2013 | 8:12 PM

இருபத்தியோரு வயதான ஆணும், பதினெட்டு வயதான பெண்ணும் உடலுறவு கொண்டால் அவர்கள் திருமணமானவர்களாக கருதப்படுவர் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் கர்ணன், அளித்திருக்கும் தீர்ப்பு தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு திருமணம் செய்துகொள்வதாகக் கூறி உடலுறவு கொண்டு பின்னர் ஏமாற்றும் ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை என்று ஒரு சிலரும், திருமணத்திற்கு முன்னரே உடலுறவு கொள்ள இந்த தீர்ப்பு தூண்டக்கூடும் என்று ஒரு சிலரும், உடலுறவையே திருமணமாக்குவது என்பது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்று வேறு சிலரும் வாதிடுகின்றனர்.
  
அதேவேளை, ஜீவனாம்சம் கேட்டு பெண் தொடர்ந்த வழக்கில் 21 வயது நிரம்பிய திருமணமாகாத ஆணும் 18 வயது நிரம்பிய திருமணமாகாத பெண்ணும் உடல்ரீதியான உறவு வைத்துக் கொண்டால் அவர்கள் கணவன் மனைவியாக கருதப்படுவர் என்ற தீர்ப்பு இந்திய கலாசாரத்தை சிறுமைப்படுத்தும் வகையில் கூறப்படவில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
கோவையை சேர்ந்த பாத்திமா பீவிக்கும் அவருடன் வேலை செய்த அன்வருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் 1994 செப்டம்பர் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு அன்வர் தனியாக சென்று விட்டார். இதையடுத்து, தனக்கும், குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க கோரி பாத்திமா பீவி, கோவையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பாத்திமா பீவியின் குழந்தைகளுக்கு அன்வர் மாதம் தலா ரூ.500 ஜீவனாம்சம் தர உத்தரவிட்டது.
இதை எதிர்த்தும் தனக்கு ஜீவனாம்சம் வழங்க கோரியும் பாத்திமா பீவி, உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சி.எஸ்.கர்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:
திருமணத்துக்கு முன்பு இருவருக்கும் இடையே உடல்ரீதியான உறவு இருந்தது என்பதை மனுதாரர் மறுக்கவில்லை. இருவரும் ஒரே வீட்டில் வசித்துள்ளனர். 2 குழந்தைகள் பிறந்துள்ளன. கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். 18 வயது நிரம்பிய பெண், 21 வயது நிரம்பிய ஆணுடன் உடல் ரீதீயான உறவு வைத்துக் கொண்டு அந்த பெண் கர்ப்பம் தரித்தால் இருவரும் கணவன் மனைவி என்றே அழைக்கப்படுவார்கள். அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் நிலையில் நீதிமன்றத்தில் உரிய உத்தரவை பெற்ற பிறகே அவர்கள் மறுமணம் செய்ய முடியும்.
தாலி கட்டுதல், மாலை மாற்றுதல், மோதிரம் மாற்றுதல், பதிவு செய்தல் போன்ற சம்பிரதாயங்கள் இருவரும் சார்ந்த மதரீதியான சடங்குகளை நிறைவேற்றவும் சமூகத்தை திருப்திபடுத்துவதற்கும் தான். சட்டப்படியான வயது வந்தபிறகு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே உடல்ரீதியான உறவு ஏற்படும் பட்சத்தில் அவர்கள் கணவன் மனைவி என்றே கருதப்படுவார்கள். இந்த வழக்கில் இருவரும் கணவன் மனைவி என்பதற்கான சான்றுகளின் அடிப்படையிலேயே குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, மனுதாரருக்கு அவரது கணவர் மாதம் ரூ.500 ஜீவனாம்சமாக வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த உத்தரவு தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து ஏராளமான விமர்சனங்கள் வந்தன. இதையடுத்து, நீதிபதி நேற்று வெளியிட்ட விளக்கம் வருமாறு:
திருமணமாகாத 21 வயதை கடந்த ஆணும், திருமணமாகாத 18 வயதை கடந்த பெண்ணும் திருமணம் செய்ய முடிவெடுத்து, அதற்கு முன்பே உடல் ரீதியான தொடர்பு வைத்துக் கொண்டு, பின்னர் அந்த பெண்ணை ஆண் திருமணம் செய்ய மறுத்தால், அந்த பெண் தனது சமூக அந்தஸ்தை காப்பாற்ற மனைவி என்பதை நிரூபிக்க உரிய ஆதாரங்களுடன் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். அந்த பரிகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும் தான்.
இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு எந்த மதத்தையும் எந்த இந்தியரையும் புண்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகங்கள், மதங்கள், கலாசாரங்கள் அடிப்படையிலான திருமண முறையை சிறுமைப்படுத்தும் விதத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. திருமணம் செய்வதாக உறுதியளித்து விட்டு பின்னர் தனித்து விடப்பட்டால் பாதிக்கப்பட்ட பெண் தான் மோசடி செய்யப்பட்டதை எதிர்த்து சம்மந்தப்பட்ட ஆண் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. அதே நேரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேட எந்த விதியும் இல்லை.
உயர் நீதிமன்றம்தான் மாநிலத்தில் தலைமையான நீதிமன்றமும் அரசியலமைப்பு அதிகாரமும் படைத்ததாகும். எனவே தான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்டரீதியான உதவி வழங்கியுள்ளது. இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக புரிந்து கொள்ளாமல் எதிர்மறையான விமர்சனங்களைக் கூறக்கூடாது. பல்வேறு சமூகத்தினர் பின்பற்றி வரும் கலாசாரம் மற்றும் மத கோட்பாடுகளுக்கு எதிராக எந்த வகையிலும் இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய கலாசாரம் மற்றும் பெண்களின் நலன் கருதி நீண்ட ஆய்வுக்குப் பிறகே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE