Saturday, June 1, 2013

பொத்துவிலில் பௌத்த விகாரை அமைப்பதில் மீண்டும் சர்ச்சை

பொத்துவிலில் பௌத்த தூபி அமைக்கும் இடம் தொடர்பாக மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தூபி அமைப்பதற்காக மதுரஞ்சேனை கிராமிய அபிவிருத்திச் சங்கக் கூட்டத்துக்கருகில் கடந்த மார்ச் 23ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த இடத்தில் தூபி அமைப்பதனை ஊர்வாசிகள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணமாக தூபியை முஹுது விஹாரைக்கருகிலுள்ள மண்மலையில் மீண்டும் அமைப்பதற்கு இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதனால் சர்ச்சை உருவாகியுள்ளது.

சிங்களவர்கள் எவரும் வாழாத மண்மலையில் தூபி அமைப்பதனை எதிர்த்ததன் காரணமாக புதை பொருள் ஆய்வு நிலையத்துக்கருகிலுள்ள அல் குபா ஆரம்ப பாடசாலைக்கருகில் பள்ளமான பதிவான இடத்தில் 90 அடி நிலத்தை விட்டுக் கொடுத்து பௌத்த தூபி அமைப்பதற்கு அனுமதிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.
இவ்விடத்திலுள்ள புதிய அல்குபா ஆரம்பப் பாடசாலைக்கு மாற்றீடாக புதிய இரண்டு மாடிக்கட்டிடம் பெற்றுக் கொள்ளுதல் எனவும் அம்பாறை அரசாங்க அதிபரும் மேற்கூறப்பட்டோரும் ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டனர். இம்முடிவை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோர் அங்கீகரித்தனர்.
புத்திஜீவிகள் உலமாக்கள் மற்றும் பிரமுகர்கள் ஊரில் காணப்பட்ட இந்த இணக்கப்பாட்டை அங்கீகரிக்காது. இப்பிரதேசத்தில் வசிப்பவர்கள் சிலர் மண்மலையிலே தூபி அமைக்கப்பட வேண்டுமென கடிதம் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு கையளித்ததனையடுத்து மண் மலையில் பௌத்த தூபி அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்கடிதத்தை பொத்துவில் ஜம்மியத்துல் உலமா வழங்கியதாக ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான ஒரு வேண்டுகோளை பொத்துவில் ஜம்மியத்துல் உலமாக் கிளை வழங்கியதாக கூறுவதில் உண்மையில்லை என்றும் பொத்துவில் ஜம்மியத்துல் உலமாவின் செயலாளர் மௌலவி முகைதீன் பாவா நவமணிக்குத் தெரிவித்தார். ஆனாலும், ஊர்வாசிகள் என்ற வகையில் இவ்வாறான ஒரு கோரிக்கையை தமது பள்ளிவாசல் சார்பில் விடுத்ததாக அவர் தெரிவித்தார்.
இதேநேரம், மண்மலையில் பௌத்த விகாரை அமைப்பதற்கு கரையோரத் திணைக்களம் நகர அபிவிருதத்தி சபை பொத்துவில் பிரதேச சபை ஆகியவற்றின் அனுமதி பெறாது நடவடிக்கை எடுப்பதனை ஆட்சேபித்து தான் நீதிமன்றம் செல்லப் போவதாக பொத்துவில் பிரதேச சபையின் தலைவர் எம்.எஸ்.ஏ. வாஸித் தெரிவித்தார்.

No comments:

Post a Comment