Sunday, June 2, 2013

சட்டவிரோத மின்சாரம் பெற்ற 23 பேர் மட்டக்களப்பில் கைது: 3,55,653 ரூபா அபராதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை மின்சார சபையினரால் நடத்தப்பட்ட திடீர் பரிசோதனையில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற 23 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களிடமிருந்து 3,55,653 ரூபா தண்டப்பணமாக பெறப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் புலனாய்வு அதிகாரி எம்.ஆர்.எம்.பி.தஸனாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 28ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மின் மாணிகளை உடைத்து மின்சாரம் பெற்ற குற்றத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு ஒருவருக்கு 82,489 ரூபாவும் மற்றவருக்கு 32,346 ரூபாவும் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.
கடந்த 29ஆம் திகதி வவுனதீவு பொலிஸ் பிரிவில் சட்ட விரோத மின் பாவனையில் 10 பேர் கைது செய்யப்பட்டு தலா ஒருவரிடம் இருந்து 7,750 வீதம் அறவிடப்பட்டுள்ளதுடன் 30ஆம் திகதி கல்குடா பொலிஸ் பிரிவில் ஏழு போர் கைது செய்யப்பட்டதுடன் இவற்றில் ஒருவருக்கு 46,010 ரூபாவும் மீதி ஆறு பேருக்கு தலா 7,650 ரூபா வீதமும் 31ஆம் திகதி காத்தான்குடியில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு தலா ஒருவருக்கு 17,852 ரூபாவும் தண்டப் பணமாக நீதி மன்றங்களின் மூலம் இலங்கை மின்சார சபைக்கு அறவிடப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் புலன் விசாரனைக்குப் பொறுப்பான முகாமையாளர் எல்.சேனாரத்னவின் வழிகாட்டலில் பிரதி புலனாய்வு அதிகாரி எல்.பி.சமரதுங்க மற்றும் புலனாய்வு அதிகாரி எம்.ஆர்.எம்.பி.தஸனாயக்க ஆகியோரின் தலைமையில் இக்குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து சட்ட விரோதமாக மின்சாரம் பெற்று வரும் நபர்கள் தொடர்பாக தகவல்களைப் பெற்று வருகின்றனர்.
இச்சந்தேக நபர்கள் தொடர்பில் அந்தந்த பிரதேச பொலிஸ் நிலையங்கள் மூலம் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment