Tuesday, June 18, 2013

புதிய சட்டமூலத்தினால் சுமார் 18,000பேர் வாக்களிக்க தகுதிபெறுவர்

இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கான விஷேட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், சுமார் 18,000 இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிக்கும் தகுதியினைப் பெறுவர் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிர்வாக இயக்குநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
 
கீர்த்தி தென்னகோன், ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள விசேட குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவையாவன...
 
' நாடாளுமன்றத்தில் நேற்றுநிறைவேற்றப்பட்ட, இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்கான விஷேட சட்டமூலம் வரவேற்கத்தக்கது. மக்களின் இறைமையை பாதுகாக்கும் முதற்படியாக நான் இதனைக் கருதுகிறேன். இந்தச் சட்டமூலத்தின் மூலம் வாக்குரிமை பறிக்கப்பட்ட சுமார் 18 ஆயிரம் மக்கள் தமது வாக்குரிமையை பாவிக்கும் சந்தர்ப்பத்தை மீளப்பெற்றிருக்கிறார்கள்.
 
இந்த மசோதாவின்மூலம் தமது வாக்குரிமையையும் வாக்களிக்கும் அடிப்படை உரிமையையும் இடம்பெயர்ந்த மக்கள் பெற்றிருக்கிறார்கள்.
 
யுத்தகாலத்தில் வடக்கிலிருந்து பல வருடங்களாக மக்கள் இடம்பெயர்ந்து வந்திருக்கிறார்கள். அப்படி இடம்பெயர்ந்தவர்கள் நாட்டின் பல பகுதிகளில் வாழ்கின்றபோதிலும் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தமது வாக்குரிமையை எங்கும் பதியாமல் இருந்திருக்கிறார்கள். இவர்களது பெயர் விபரம் 2012ஆம் ஆண்டு வாக்காளர் கணக்கெடுப்பு பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படாமல் இருந்திருக்கிறது. ஆகையினால், தமது வாக்குரிமையை இழந்த மக்கள் எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிக்கும் வரபிரசாதத்தை இச்சட்டமூலத்தினால் மீளப் பெற்றிருக்கிறார்கள்.
 
இப்புதிய சட்டமூலத்தின் அடிப்படையில் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெயர்ந்து, வாக்குரிமையற்று வாழும் சுமார் 18,000 மக்கள் தம்மை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்வார்கள் என நம்புகிறோம்.
 
இந்த மசோதாவானது இடம்பெயர்ந்த மக்கள் எப்படி தங்களை வாக்காளர் பட்டியலில் இணைந்துக்கொள்வது என்பது பற்றி தெளிவாக தெரிவிக்கிறது. ஆகையினார் இடம்பெயர்ந்த மக்கள் இச்சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி, தமது வாக்குரிமை என்னும் அடிப்படை உரிமையை முறையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கபே அமைப்பு கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment