Home » , » ஜெனீவா நோக்கி இலங்கைக்கு எதிரான மற்றுமொரு அம்பு

ஜெனீவா நோக்கி இலங்கைக்கு எதிரான மற்றுமொரு அம்பு

Written By EGK NEWS on Tuesday, May 28, 2013 | 8:20 PM

இலங்கையில் ஒன்றுகூடலுக்கான சுதந்திரம் இல்லை என்று ஐ.எம்.ஏ.டி.ஆர் (இமாதார்) எனப்படும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்திடம் எழுத்துபூர்வமாக தெரிரிவித்துள்ளது.

ஜெனீவாவில் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் 23 ஆவது கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையிலேயே இந்தக் கடிதம் அந்தக் கூட்டத்தினருக்கு எழுதப்பட்டுள்ளது.


நாட்டின் பல பகுதிகளில் நடைபெறும் சம்பவங்கள் காரணமாக மக்கள் ஒன்றுகூட முடியாத சூழல் நிலவுகிறது என்றும் இமதார் அமைப்பு தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் அமைதியான வகையில் ஒரு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அரசால் அனுப்பப்பட்டவர்கள் என்று அவர்களால் குற்றஞ்சாட்டப்படுபவர்கள், தடிகளைக் கொண்டு அந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோரை தாக்கினர் என்று அந்த அமைப்பு எழுந்தியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டத்தில் பங்குபெற்ற வழக்கறிஞர்கள், சிவில் சொசைட்டி செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது என்றும் இமாதார் எனும் அந்த மனித உரிமைகள் அமைப்பு கூறுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி, பௌத்த கடும்போக்கு அமைப்பு என்று கூறப்படும் பொதுபல சேனாவுக்கு எதிராக, அதன் தலைமையகத்தின் முன்பு மெழுகுவர்த்திகளை ஏந்தி அமைதியாக நடைபெற்ற ஒரு போராட்டம் காவல்துறையால் கலைக்கப்பட்டதையும் தமது கடிதத்தில் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் அதே நேரம் அரசுக்கு ஆதரவாக ஏதாவது கூட்டம் நடைபெற வேண்டுமானால் அதற்கு எந்தத் தடையும் இல்லை என்று இமாதார் அமைப்பின் இயக்குநர் நிமால்கா ஃபெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசுக்கு ஆதரவாக அவர்களது அரசியல் கருத்துக்களை முன்னெடுக்கக் கூடிய வகையில் இருந்தால், அதற்கான ஏற்பாடுகளை அரசே செய்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

நாட்டின் வட பகுதியிலேயே இவ்வகையான ஒன்றுகூடல் சுதந்திரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றும் நிமால்கா ஃபெர்ணாண்டோ கூறுகிறார்.

மக்கள் ஒன்றுகூடி காணாமல்போன தமது உறவுகள் குறித்தோ அல்லது இதர விஷயங்கள் குறித்தோ போராட்டம் நடத்த முற்பட்டால் அது ஆட்பலத்தை கொண்டு ஒடுக்கப்படுகிறது எனவும் அவர் கூறுகிறார்.

(பிபிசி)

0 comments:

Post a Comment

Design Your Site For Low Cost

YOUR ADVERTISE HERE